May
17th

வெற்றிக்கு படிக்கட்டுகளாக எடுத்துக்கொள்வோம்: டாக்டர் ராமதாஸ்

Author: anuramas | Files under Corruption, Parliament Election 2009, Regional

சென்னை, மே.17: 7 தொகுதிகளிலும் பா.ம.க.வுக்கு ஏற்பட்டுள்ள தோல்வியை நாளைய வெற்றிக்கு படிக்கட்டுகளாக எடுத்துக்கொள்வோம் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“ஆளும் கட்சியினர் தாங்கள் குவித்திருந்த கோடிகளில் சில கோடி ரூபாய்களையும், தேர்தல் விதிகளை மீறி; ஆணையத்தின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு அரசாங்க பணத்தையே செலவிட்டு வசதிகள் செய்திட சில கோடி ரூபாய்களை செலவழித்ததும் போதாமல்; அடிப்பதுபோல் அடி, நாங்கள் அழுவதுபோல் அழுது எங்கள் காரியத்தை சாதித்துக்கொள்கிறோம் என்ற சூழ்ச்சியில் ஈடுபட்டும் – வாக்காளர்களுக்கு நூறு ரூபாய் முதல் ஐநூறு ரூபாய் வரை வழங்கியும் இந்த வெற்றியை பெற முடிந்தது என்ற உண்மை, வாக்களித்தவர்களுக்கும், வெற்றி பெற்றவர்களுக்கும், அவர்களை வாழ்த்துகிறவர்களுக்கும் நன்றாகவே தெரியும்.” – சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற இடைத்தேர்தலில் அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. தோல்வியடைந்தபோது, அதன் தலைவர் தெரிவித்த கருத்துகள் தான் இவை.

இப்போது மக்களவைத் தேர்தலில் தி.மு.க. அடைந்திருக்கும் வெற்றிக்கு, அதிலும் குறிப்பாக பா.ம.க. போட்டியிட்ட தொகுதிகளில் தி.மு.க. அதிக “விலை கொடுத்து” வாங்கியிருக்கும் வெற்றிக்கு அவர் அன்று சொன்ன வார்த்தைகள் அப்படியே பொருந்தும். இந்த தேர்தலில் ஜனநாயகம் தோற்றிருக்கிறது; பணநாயகம் வென்றிருக்கிறது. வேறு யார் வெற்றி பெற்றாலும் பரவாயில்லை – பா.ம.க. வேட்பாளர்களை மட்டும் இந்த தேர்தலில் தோற்கடிக்க வேண்டும்; எதை வேண்டுமானாலும் செய்து இந்த காரியத்தை கச்சிதமாக முடிக்க வேண்டும் என்ற கட்டளையுடன் பா.ம.க. போட்டியிட்ட தொகுதிகளில் அமைச்சர்களும், ஆளும் கட்சியின் முக்கிய பிரமுகர்களும் பண மூட்டைகளுடன் களமிறக்கப்பட்டனர்.

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் சராசரியாக 72 விழுக்காடு வாக்குகள் பதிவாகியிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் ஏறக்குறைய பாதி தொகுதிகளில் 70 விழுக்காட்டிற்கும் குறைவாக வாக்குகள் பதிவாகியிருக்கிறது. சில தொகுதிகளில் 75 விழுக்காட்டிற்கும் அதிகமாக வாக்குகள் பதிவாகியிருக்கிறது.

அப்படி 75 விழுக்காட்டிற்கும் அதிகமாக வாக்குகள் பதிவான தொகுதிகளில் பா.ம.க. போட்டியிட்ட 5 தொகுதிகள் உள்ளன என்பதிலிருந்து பா.ம.க.வை எந்த அளவுக்கு குறிவைத்து வீழ்த்துவதற்கான வி௯கத்தை வகுத்து, கோடிகளை கொட்டியும், அதிகார துஷ்பிரயோகம் செய்தும் ஆளும் கட்சியினர் செயல்பட்டிருக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ளலாம். பா.ம.க. போட்டியிட்ட தொகுதிகளில் பணம் கொடுத்தார்கள் என்று சொல்லுவது மிகச் சாதாரணம். பணத்தை அள்ளி வீசி விதைத்திருக்கிறார்கள் – விதைத்த அளவுக்கு அறுவடை செய்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். நடுநிலையாக இருக்க வேண்டிய காவல்துறையினரும், அரசு அலுவலர்களும் தி.மு.க.வினருக்கு துணை போயிருக்கிறார்கள். ஒரு வாக்குச்சாவடிக்கு குறைந்தது 50 கள்ள வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்று கட்டளையிடப்பட்டிருக்கிறது. ஆளும் கட்சி தான் வெற்றி பெறப்போகிறது என்ற ஒரு பரப்புரை இந்த தொகுதிகளில் காவல்துறையினராலும், அரசு அலுவலர்களாலும் திட்டமிட்டு செய்யப்பட்டிருக்கிறது.

கள்ள வாக்குகளை பதிவு செய்வதற்கான முன்னோடியாகவே இத்தகைய பரப்புரை முன்கூட்டியே நடத்தப்பட்டிருக்கிறது என்று உணர முடிகிறது. இப்படியெல்லாம் முறைகேடுகளை செய்து ஆளுங்கட்சியினர் தட்டிப் பறித்துள்ள இந்த வெற்றி உண்மையானதல்ல. அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட இந்த வெற்றி நிலையானதும் அல்ல. வாழ்க்கை ஒரு சக்கரம். இன்று மேலே இருப்பது நாளை கீழே இறங்கித்தான் ஆக வேண்டும். பல்வேறு முறைகேடுகளை செய்து ஆளும் கட்சி பணபலத்தால் பெற்றுள்ள இந்த வெற்றியினால் ஏற்பட்டுள்ள தற்காலிக தோல்வியைக் கண்டு பா.ம.க.வினர் சோர்ந்துவிட மாட்டார்கள். நாளைய வெற்றிக்கு இதை படிகட்டுகளாக எடுத்துக்கொண்டு `பீனிக்ஸ்’ பறவையைப் போல பா.ம.க. அரசியலில் மீண்டும் எழும்; வெற்றிநடை போடும்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Most Commented Posts

One response. Wanna say something?

  1. Hari
    Dec 4, 2009 at 17:35:27
    #1

    can we do something for stop this money involvement for elections? i dont think so……….

Post a Comment